வேகத்தடுப்பு இல்லாத ஆறு வழிச்சாலை திருப்போரூர் சந்திப்பில் விபத்து அபாயம்
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம்- ஆலத்துார் ஊராட்சி - வெங்கலேரி இடையே புறவழிச் சாலையாக, ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதில், கனரக வாகனங்கள் உட்பட, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இதில், திருப்போரூரில் நெம்மேலி சாலை - ஆறு வழிச்சாலையில் உள்ள நான்குமுனை சந்திப்பில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், திருப்போரூர் கந்தசுவாமி கோவில், சார் -- பதிவாளர் அலுவலகம், ஓ.எம்.ஆர்., சாலை, செங்கல்பட்டு சாலை, இ.சி.ஆர்., சாலை சார்ந்த பல்வேறு பகுதிகளுக்கு திரும்பிச் செல்கின்றனர்.மேற்கண்ட நான்கு முனை சந்திப்பில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் போதிய வேகத்தடை, இரும்பு தடுப்புகள் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை.இதனால், வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, விபத்தை தடுக்க, இரண்டு அடுக்கு இரும்பு தடுப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள், பல்வேறு பணிகளுக்காக சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். சென்னையிலிருந்து திருப்போரூர் செல்லும் புது வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்லும் போது, இந்த நான்கு முனை சந்திப்பில் திருப்போரூர் திரும்பும் போது தடுமாறுகின்றனர். பலர் இங்கு கீழே விழுந்து சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர். எனவே, இந்த சந்திப்பில் இரும்பு தடுப்பு வைப்பதுடன், அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.