நெடுஞ்சாலை ஓரம் போட்டி போட்டு கொடி கம்பங்கள் வைப்பதால் ஆபத்து; நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
மறைமலை நகர்; செங்கை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில், பல இடங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி சங்கங்களின் கட்சி கொடிகள் மற்றும் கல்வெட்டுகள், பெரிய ராட்சத இரும்பு கம்பங்களில் வைக்கப்பட்டுள்ளன.கொடிக் கம்பங்களை எந்த கட்சி பெரிய அளவில் வைப்பது என, போட்டி போட்டு, ஒரு கட்சியை விட மற்றொரு கட்சி பெரிதாக உயரமான இரும்பு கம்பம் வைத்து கொடி ஏற்றி வருகின்றனர்.பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலை ஓரம், வண்ண வண்ண கொடிகள் உள்ளது, வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுத்தும்.வாகன ஓட்டிகள், கட்சிக் கொடிகளை பார்த்த வண்ணம் செல்லும் போது, விபத்தில் சிக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பெரும்பாலான கட்சியினர், நெடுஞ்சாலைத் துறையிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ உரிய அனுமதி பெறாமல், முக்கிய பிரமுகர்கள் வரும் போது, தங்களின் கட்சி கொடிகளை உள்ளூர் பிரமுகர்கள் வைத்து வருகின்றனர்.ஒவ்வொரு கம்பமும், 10 அடி உயரம் முதல் 50 அடி உயரம் வரை நடப்பட்டு வருகிறது. நீதிமன்றம், கடந்த மாதம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டும், இதுவரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம், விபத்து ஏதும் ஏற்படும் முன், நெடுஞ்சாலையோரம் உள்ள கொடி கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.