ரூ.188 கோடி பாதாள சாக்கடை திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிக்க முடிவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள், 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. 'இப்பணிகள் மூன்று ஆண்களில் முடிக்கப்படும்' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.செங்கல்பட்டு முதல் நிலை நகராட்சியில், 6.09 ச.மீ., பரப்பளவில், 33 வார்டுகள் உள்ளன. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 64,138 பேர் வசித்து வருகின்றனர். நகரில், 11,285 வீடுகள் உள்ளன. 61.46 கி.மீ., நீள சாலைகள் மற்றும் 62.67 கி.மீ., நீள வடிகால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.செங்கல்பட்டில் ஜே.சி.கே.நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், குண்டூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், 485 தெருக்கள் உள்ளன. கொசு தொல்லை
நகராட்சி மேற்கு பகுதி மேடாகவும், கிழக்கு பகுதியில், கொளவாய் ஏரி தாழ்வாகவும் அமைந்துள்ளன. மழைநீர் வடிகால்வாய் வாயிலாக பல ஆண்டுகளாக, மழைநீர் கொளவாய் ஏரிக்கு செல்கிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய்களில் விடப்படுகிறது.இதனால், கொசு உற்பத்தி பெருகி நகரவாசிகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மழைநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர், கொளவாய் ஏரியில் கலக்கிறது. இங்கிருந்து கழிவுநீர், பாலாற்றுக்கு செல்கிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கிறது. இதை தவிர்க்க, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக அரசிடம் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.நகரில், பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை, காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தயார் செய்து, 2020 பிப்., மாதம் 194 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர்.அதன் பின், அதே ஆண்டு, திருத்திய திட்ட மதிப்பீடு 165.44 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.மேலும், 2022 செப்., மாதம், 220.74 கோடி ரூபாய்க்கு, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைத்தனர்.அதே டிசம்பர் மாதம், சட்டசபையில், '240 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்' என, அமைச்சர் நேரு தெரிவித்தார். நிதி ஒதுக்கீடு
தற்போது, பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 2023- - 24 நிதியாண்டில், 206.18 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது,தற்போது திருத்திய மதிப்பீடாக, 188.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது. இத்திட்டத்தில், மத்திய அரசு துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில், 63 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வங்கிக் கடன் வாயிலாக, 62.48 கோடியும், தமிழக அரசு 62.47 கோடியும் என, மொத்தம் 188.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதை செயல்படுத்த, கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.இப்பணிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 'டெண்டர்' விட்டதில், தனியார் ஒப்பந்ததாரர் எடுத்துள்ளார். இந்த பாதாள சாக்கடை திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், மார்ச் மாதம் 11ம் தேதி துவக்கி வைத்தார். அதன் பின், பாதாள சாக்கடை திட்டத்திற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் ஆகியோர், கடந்த 30ம் தேதி பூமி பூஜையை துவக்கி வைத்தனர். கலெக்டர் அருண்ராஜ், நகரமன்ற தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் அன்புச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகராட்சி பகுதியில், ஜே.சி.கே.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.