பள்ளி வகுப்பறை கட்ட ரூ.2.45 கோடி ஒதுக்கீடு
நீலாங்கரை, நீலாங்கரை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 2.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 192வது வார்டு, நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். சில வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. மேலும், மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், கூடுதலாக பத்து வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு, 2.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பருவமழை முடிந்த பின், பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.