நெம்மேலியில் மாணவியர் விடுதி கட்ட ரூ.5.45 கோடி ஒதுக்கீடு
மாமல்லபுரம்:நெம்மேலி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, மாணவியர் விடுத்தி கட்ட ரூ.5.45கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி கிராமத்தில், அரசு கலை மற்றம் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விடுதியில்லாததால், வாடகை கட்டடத்தில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு, இட நெருக்கடியில் தங்கி உள்ளனர். இதனால், மாணவ- மாணவியருக்கு தனித்தனியாக விடுதி கட்டித்தர வேண்டும் என, அரசுக்கு கல்லுாரி நிர்வாகம் பரிந்துரை செய்தது. தொடர்ந்து மாணவியர் விடுதி கட்ட ஒரு ஏக்கர் நிலமும், மாணவர்கள் விடுதி கட்ட 0.50 சென்ட் நிலமும் ஒதுக்கீடு செய்து, கல்வித்துறைக்கு, வருவாய்த்துறை வழங்கியது. இதைத்தொடர்ந்து, 100 மாணவியர் தங்கி படிக்கும் வகையில், நபார்டு திட்டத்தில், மாணவியர் விடுதி கட்ட 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது விடுதி கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், மாணவர்கள் விடுதி கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.