தனித்தனி பாதை!
நெரிசலை தவிர்க்க சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு...775 போலீசாரை பாதுகாப்பிற்கு நியமித்து நடவடிக்கைசெங்கல்பட்டு, ஜன. 12-பொங்கல் விழாவையொட்டி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பகுதிகளில், 775 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுங்கச்சாவடிகளில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வாகனங்களுக்கு தனித்தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.சென்னையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கட்டுமான பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள், பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊருக்குச் செல்ல, அரசு மற்றும் தனியார் பேருந்து, கார், இருசக்கர வாகனங்களில் செல்வர். பொங்கல் திருவிழா முடிந்ததும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவர். இதனால், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.இதைத் தவிர்க்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் ஆகிய சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் எளிதில் செல்ல, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்வதற்கு தனித்தனி பாதை அமைக்கப்பட்டு, இதன் வழியாக வாகனங்கள் செல்கின்றன.இதையடுத்து பரனுார் -- ஆத்துார் வரை, 450 போலீசார் மற்றும் காஞ்சிபுரம் புறவழிச்சாலை, பாலாற்று பாலம், படாளம், மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுமட்டுமின்றி கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை ஆகிய பகுதிகளில், 325 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணித் கூறியதாவது:மாவட்டத்தில் முக்கிய சாலைகளில், 775 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பரனுார் - அச்சிறுபாக்கம் - ஆத்துார் சுங்கச்சாவடிகள் வரை, 24 மணி நேரமும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், மதுபோதையில் வாகனத்தை இயக்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் 'சீட் பெல்ட்' அணிந்து ஓட்ட வேண்டும். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பள்ளங்கள் சீரமைப்பு
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்று பாலத்தில், சென்னை - திருச்சி சாலையில் பள்ளங்கள் அதிகமாக ஏற்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் செல்லும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பொங்கல் திருவிழாவிற்கு பொதுமக்கள் எளிதில் சென்றுவர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, பாலாற்று பாலத்தில் இருந்த பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.