சொக்கப்பனை விநாயகர் கோவில் புனரமைப்பு பணிகள் தாமதம்
திருக்கழுக்குன்றம்: :திருக்கழுக்குன்றம் சொக்கப்பனை விநாயகர் கோவில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துமாறு, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. அதன் குழு கோவிலாக, சொக்கப்பனை விநாயகர் கோவில், வேதமலை அடிவார வீதி, சன்னிதி வீதி ஆகியவற்றின் சந்திப்பு பகுதியில் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்தின் போது, இக்கோவிலின் முன், சொக்கப்பனை ஏற்றப்படுவதால், 'சொக்கப்பனை விநாயகர்' என பெயர் பெற்றார். சுவாமியின் வாகனமாக, யானை உள்ளது. இக்கோவில் நீண்டகாலமாக பராமரிப்பின்றி சீரழிந்தது. இதை புனரமைக்குமாறு பக்தர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, நன்கொடையாளர் மூலமாக புனரமைக்க, கோவில் நிர்வாகம் முயன்றும் இயலவில்லை. எனவே, அறநிலையத் துறையே புனரமைப்பதாக, 2023 சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வேதகிரீஸ்வரர் கோவில் நிதி, 8 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. சன்னிதி, விமான கோபுரம், சுவர் உள்ளிட்டவை புனரமைக்கப்படுகின்றன. ஓராண்டிற்கும் மேலாகியும், சிறிய கோவிலின் பணிகள் முடிக்கப்படாமல், கும்பாபிஷேகம் தாமதமாகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துமாறு பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.