தனியார் பள்ளி பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் படுகாயம்
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பெரிய வையாவூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 35; மெக்கானிக்.இவருக்கு ஜீவா, 5, என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.மதுராந்தகத்தில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வரும் ஜீவா, பள்ளி பேருந்தில் செல்வது வழக்கம்.அதன்படி, நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, பள்ளி பேருந்தில் படிக்கட்டிற்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்து வந்துள்ளார்.பேருந்து கதவை மூடாமல், ஓட்டுநர் வாகனத்தை இயக்கி வந்துள்ளார்.அப்போது, பேருந்து வையாவூர் அருகே வந்த போது, ஓட்டுநர் திடீர் 'பிரேக்' பிடித்துள்ளார்.இதனால் நிலை தடுமாறிய மாணவர் ஜீவா, படியில் உருண்டு சாலையோரமாக கீழே விழுந்துள்ளார்.இதில் அவரது தலை, உதடு, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.அங்கிருந்தோர் மாணவனை மீட்டு, பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.அதன் பின், படாளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து மாணவனின் பெற்றோர், பள்ளி வாகனத்தின் கதவை மூடாமல், அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக, ஓட்டுநர் மீது, படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரிக்கின்றனர்.