அம்மணம்பாக்கத்தில் தார்ச்சாலை அமைப்பு
அச்சிறுபாக்கம்: அம்மணம்பாக்கம் கிராமத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, கடந்த 2007ம் ஆண்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பராமரிப்பு இன்றி சேதமடைந்தது. இதனால், மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி, பயன்படுத்த முடியாதவாறு இருந்தது. சுபாஷ் சந்திரபோஸ் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பழைய பள்ளிக்கூட தெரு, மினி டேங்க் தெரு, பஸ் ஸ்டாப் தெருக்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், சாலையில் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அதிகாரிகள் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 46 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது தார்ச்சாலை அமைக்க பணி துவங்கப்பட்டது. நேற்று, ஜல்லி மற்றும் தார் கலவையால், சாலை அமைக்கும் பணி நடந்தது.