குண்டும் குழியுமான சாலை கோவிலம்பாக்கத்தில் அவதி
கோவிலம்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இங்குள்ள, கோவிலம்பாக்கம்- - எஸ்.கொளத்துார் சாலையில், ஏராளமான கடைகள், அரசு, தனியார் பள்ளிகள், அங்கன்வாடி வளாகம், குடியிருப்புகள் நிறைந்துள்ளன.இந்நிலையில், கோவிலம்பாக்கம்- - எஸ்.கொளத்துார் சாலையையும், துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையையும் இணைக்கும் விநாயகபுரம் பிரதான சாலையில், கடந்தாண்டு, 15 அடி அகலத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து, கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.இதுகுறித்து பகுதிவாசிகள கூறியதாவது:விநாயகபுரம் பிரதான சாலையில் சேகராமாகும் மழைநீர், கால்வாயில் கலக்க இணைப்பை ஏற்படுத்தாததால், மழைநீர் வெளியேற வழியின்றி, சிறு மழைக்கே குட்டை போல் மாறி விடுகிறது.தவிர, எஸ்.கொளத்துார் ஏரியை ஒட்டியுள்ள கிணறுகளில் நீர் எடுக்க, தினமும் 100க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வந்து செல்கின்றன. எனவே, சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.சாலையில் தேங்கியுள்ள மழைநீரால், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையிலுள்ள பள்ளங்களை கவனிக்க தவறி, நிலை தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், இது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்கின்றனர்.நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டால், சாலை அமைப்பது மட்டுமே எங்கள் வேலை. பராமரிப்பது, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீர்செய்து, மழைநீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுப்பதுடன், முறையின்றி செயல்படும் தண்ணீர் லாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.