முகையூர் கள்ளழகர் பாலாற்றில் இறங்கும் உற்சவம் கோலாகலம்
கூவத்துார் :கூவத்துார் அடுத்த முகையூர் பகுதியில், கள்ளழக பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், கள்ளழகர், சுந்தரவல்லி தாயார் வீற்று உள்ளனர். இது,வடதிருமாலிருஞ்சோலை என அழைக்கப்படுகிறது.இங்கு கடந்த 13 ஆண்டுகளாக சித்திரை பவுர்ணமி நாளில், கள்ளழகர் பெருமாள் பாலாற்றில் இறங்கும் உற்சவம் நடந்து வருகிறது.சித்திரை பவுர்ணமி நாளான நேற்று, கள்ளழகர் ஆற்றில் இறங்கி, கோலாகல உற்சவம் கண்டார்.காலை 5:00 மணிக்கு, கோவிலில், சுவாமி, தேவியர் மற்றும் பிற சுவாமியருக்கு, திருமஞ்சன வழிபாடு நடந்தது.அலங்கார சுவாமி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி, 7:30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டார்.மேள, தாள இசை முழங்கி, பஜனை பாடல்கள் பாடி, பக்தர்கள் அணிவகுக்க, 8:00 மணிக்கு, கூவத்துார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை அடைந்தார்.அங்கு, ஆண்டாள் சூடிய மாலையை சுவாமிக்கு அளித்து, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 8:30 மணிக்கு, வாயலுார் பாலாற்றை அடைந்தார்.அங்கு, வேத பாராயணம், கோலாட்டம், இசை முழக்கத்துடன், சுவாமி, ஆண்டாளின் மாலையை சூடி, பச்சை பட்டு உடுத்தி, திருமஞ்சனம் நடந்தது. பின், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் எழுப்ப, 10:30 மணிக்கு, சுவாமி ஆற்றில் இறங்கினார்.பழைய பாலம் வழியே, ஆற்றை கடந்து, வேப்பஞ்சேரி, கூவத்துார், வடபட்டினம், தென்பட்டினம் பகுதிகள் வழியே சென்று, மாலை கோவிலை அடைந்தார்.