திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மலையடிவார பகுதியில், பொது நுாலக துறையின்கீழ், முழுநேர கிளை நுாலகம் செயல்படுகிறது.அதன் பழமையான கட்டடம், இடியும் அபாயத்தில் இருந்தது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. நுாலக நிர்வாகமும், புதிய கட்டடத்திற்கு வலியுறுத்தியது.தொடர்ந்து, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது.திருக்கழுக்குன்றம் தாலுகா மற்றும் வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமையிடம் என்பதால், இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மக்களும் வருகின்றனர்.நாளிதழ்கள், பத்திரிகைகள் வாசிக்க, இரவல் நுால்கள் பெற, தினசரி நுாற்றுக்கும் மேற்பட்டோர் நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர்.ஆனால், புதிய கட்டடமாக இருந்தும், அதில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கழிப்பறை இருந்தும், கழிவுநீர் இணைப்பில்லாததால், பயன்பாட்டில் இல்லை.இதனால், நுாலகர் மற்றும் வாசகர்கள் பரிதவிக்கின்றனர். எனவே, நுாலக நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி, அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.