உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் சர்வதேச நகரம் டெண்டர் கோரியது டிட்கோ

மதுராந்தகத்தில் சர்வதேச நகரம் டெண்டர் கோரியது டிட்கோ

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச நகரம் உருவாக்குவதற்கான முழுமை திட்டம் தயாரிப்பிற்கான ஆலோசகரை நியமிக்க, தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில், தொழில் வளர்ச்சி அதிகம் இருப்பதால், அந்நகரங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்காக மக்கள் வருகின்றனர். இதனால், அந்நகரங்களின் எல்லை பகுதிகள் விரிவடைவதால், அந்த பகுதிகளில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதனால், அரசுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே, மக்களின் அனைத்து தேவைகளையும் ஒரே பகுதியில் பூர்த்தி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, சென்னைக்கு அருகில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இந்தாண்டு பட்ஜெட்டில் வெளியானது. சர்வதேச நகரை உருவாக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யும் பணியை சி.பி.ஆர்.இ., மற்றும் ஜே.எல்.எல்., நிறுவனங்கள் வாயிலாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க இடம் தேர்வாகியுள்ளது. இதற்கான முழுமை திட்டம் தயாரிக்க ஆலோசகரை நியமிக்க, 'டெண்டர்' அறிவிப்பை, தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நகரில் வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, வேலைவாய்ப்புகள், வணிக வளாகம், வங்கிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும். இந்நகரத்துடன் சென்னை போன்ற பெரு நகரங்களை இணைக்கும் வகையில் சாலை, ரயில் பாதை உள்ளிட்டவை உருவாக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ