தொழிற்சாலை கழிவுகளை தார்ப்பாய் மூடாமல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
மறைமலை நகர்:மறைமலை நகரில், தார்ப்பாய் மூடாமல் செல்லும் சரக்கு வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இருசக்கர வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, மோட்டார் வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் சேகரமாகும் இரும்பு துண்டுகள் மற்றும் துகள்கள் போன்ற,'ஸ்கிராப்' எனப்படும் கழிவு பொருட்கள், சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், அதிக பாரத்துடன் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது: சிப்காட்டில் இருந்து,'ஸ்கிராப்' பொருட்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், இரும்பு துண்டுகள் சாலையில் கொட்டி, வாகனங்களின் டயர்கள் பஞ்சராகின்றன. இரும்பு துகள் கண்களில் பட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தார்ப்பாய் மூடாமல் செல்லும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.