உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - திருப்போரூர் தடத்தில் மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடைகள்; நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் அதிருப்தி

செங்கை - திருப்போரூர் தடத்தில் மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடைகள்; நெடுஞ்சாலை துறை அலட்சியத்தால் அதிருப்தி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - திருப்போரூர் வரை, பயணியர் நிழற்குடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், பயணியர் அதிருப்தியில் உள்ளனர். செங்கல்பட்டு - திருப்போரூர் வரையிலான சாலை, இருவழிச் சாலையாக இருந்தது. இச்சாலையில் போக்குவரத்து அதிகமானதால், வனத்துறை கடக்கும் பகுதியில் இருவழிச் சாலையாகவும், மற்ற பகுதிகளில் நான்குவழிச் சாலையாகவும் மாற்றம் செய்ய, நெடுஞ்சாலைத்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது.

வலியுறுத்தல்

அதன் பின், 2019ம் ஆண்டு, நான்குவழிச் சாலை பணிகள் துவங்கி, 2023ம் ஆண்டு, நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. இந்த சாலையில், செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம், சென்னேரி, கரும்பாக்கம், செம்பாக்கம், மடையத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், சாலையின் இருபுறமும், பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலை விரிவாக்கத்தின் போது, பயணியர் நிழற்குடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின், மீண்டும் பயணியர் நிழற்குடைகளை, நெடுஞ்சாலைத் துறையினர் அமைக்கவில்லை. இதனால், நிழற்குடை இல்லாமல் பயணியர், மழை மற்றும் வெயிலில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தவிர்க்க, பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கை

ஆனால், பயணியர் நிழற்குடை அமைக்காமல், நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களில், மேற்கண்ட பகுதிகளில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கையின்றி, கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பேருந்து பயணியர் நலன் கருதி, இப்பகுதிகளில் நிழற்குடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை