ஏரிக்கரை சாலையில் பழுதான மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?
மறைமலை நகர்:அஞ்சூர் ஏரிக்கரை சாலையில், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள அஞ்சூர் -- குண்ணவாக்கம் ஏரிக்கரை சாலை, 2 கி.மீ., உடையது. இந்த சாலையை அஞ்சூர், குண்ணவாக்கம், ஈச்சங்கரணை உள்ளிட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். தென்மேல்பாக்கம், அனுமந்தபுரம், கொண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்குச் சென்று வருகின்றனர். இப்படி, அதிகமானோர் பயன் படுத்தி வரும் இச்சாலையில், மின் விளக்குகள் பல இடங்களில் பழுதடைந்து உள்ளன. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: சில இடங்களில் மின் இணைப்பு சரிவர இல்லாததால், இச்சாலை கும்மிருட்டாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. வழிப்பறி அச்சமும் தொடர்கிறது. அத்துடன், சாலை தெரியாமல் தடுமாறி, அருகிலுள்ள ஏரியில் தவறி விழவும் வாய்ப்புள்ளது. இந்த சாலையில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.