உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக ஏமாற்றி நகை பறித்த குறி சொல்லும் பெண் கைது

குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக ஏமாற்றி நகை பறித்த குறி சொல்லும் பெண் கைது

திருமங்கலம், ஓட்டேரி, பாஷியம் 2வது தெருவைச் சேர்ந்தவர் அக்பர், 33. இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அக்பர், அதே பகுதியில் உள்ள 'மாலிக் சிக்கன்' கடையில், டெலிவரி பாயாக பணிபுரிகிறார். மதுரவாயலில் டெலிவரி செய்வதற்காக, திருமங்கலம் வழியாக செல்வது வழக்கம்.கடந்த பிப்., 16ம் தேதி, திருமங்கலம், ஜவஹர்லால் நேரு சாலை அருகில் சென்றபோது, சாலையோரத்தில் அமர்ந்து குறி சொல்லும் பெண்ணை பார்த்துள்ளார். அவரிடம் சென்று, குடும்ப பிரச்னை குறித்து குறி கேட்டுள்ளார்.அப்போது அந்த பெண், பூஜை செய்தால் பிரச்னைகள் தீர்ந்து விடும் எனக்கூறி, 'கூகுள் பே' வாயிலாக, 38,000 ரூபாய் பெற்றுள்ளார்.அத்துடன், வீட்டில் பயன்படுத்தும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வேண்டும்; பூஜை முடிந்தவுடன் திரும்பத் தருவதாக கூறியுள்ளார்.இதை நம்பிய அக்பர், 1.5 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்களை, மனைவிக்கு தெரியாமல் கொடுத்துள்ளார்.கடந்த மூன்று நாட்களுக்கு முன் பூஜை முடிந்ததாக கூறி, பை ஒன்றை அக்பரிடம் கொடுத்து நகைகள் இருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு பின் திறந்து பார்க்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் பையை திறந்து பார்த்தபோது, அதில் நகை இல்லை என்பது தெரிந்தது.இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதில், ரெட்ஹில்ஸ், நேதாஜி நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி, 45, என்பவர் பூஜை பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அக்பரிடம் இருந்து விஜயலட்சுமி பறித்த பணம் மற்றும் நகையை மீட்ட போலீசார், அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை