மலேஷியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
சென்னை, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து, 368 பயணியருடன், மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு 'சவுதி ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று பிற்பகல் புறப்பட்டது.நேற்று இரவு 7:00 மணி அளவில், சென்னை வான் வெளி பகுதியை கடந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த, இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதி கேட்டார். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக அனுமதி அளித்தனர்.இதையடுத்து, நேற்று இரவு விமானம் தரை இறங்கியது. இங்கு தயாராக இருந்த சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர், நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்தனர். விசாரணையில், இந்தோனேஷியா நாட்டைச்சேர்ந்த ஐந்து பேரும், உம்ரா பயணமாக, ஜெட்டாவுக்கு போய்விட்டு, மலேஷியாவிற்கு திரும்பியபோது, சம்பவம் நடந்ததாக தெரிய வந்தது. சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பெண் பயணி மற்றும் அவரோடு வந்திருந்த நான்கு பேர் என, ஐந்து பேருக்கும் அவசரகால விசாக்கள் வழங்கினர். பின், 363 பயணியருடன் விமானம் சென்னையில் இருந்து, கோலாலம்பூர் சென்றது.