உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ சேவை ரூ.9,744 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ சேவை ரூ.9,744 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை :மெட்ரோ ரயில் சேவையை, கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை நீட்டிக்கும் வகையில், 9,744 கோடி ரூபாயிலான விரிவான திட்ட அறிக்கையை, தமிழக அரசிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தில், 19 இடங்களில் நிலையங்கள் அமைகின்றன.மெட்ரோ ரயில் சேவையை, கோயம்பேடு - ஆவடி வரை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்தது. பட்டாபிராம் வரை நீட்டிக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை வைத்தனர். இதையேற்ற அரசு, பட்டாபிராம் வரையில் நீட்டிப்பது குறித்த, பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டது.இதைத்தொடர்ந்து, கோயம்பேடு - பட்டாபிராம் வெளிவட்டச் சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கான திட்ட அறிக்கையை, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ச்சுனன் ஆகியோர் நேற்று சமர்ப்பித்தனர்.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்க முடிவு செய்துள்ளோம். அந்த வகையில், கோயம்பேடு - ஆவடி - பட்டாபிராம் வழித்தடத்தில், பயணியர் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, கோயம்பேட்டில் துவங்கி பாடிபுதுநகர், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் வழங்கி உள்ளோம். அம்பத்துார் எஸ்டேட், ஆவடி ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் என, முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அம்பத்துார் எஸ்டேட் பஸ் பணிமனை சந்திப்பு, டன்லப் அருகே, ஆவடி பஸ் நிலையத்திற்கு முன் என, மூன்று இடங்களில் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைந்து கட்டப்படும். மொத்தம், 21.76 கி.மீ., துாரமுள்ள இந்த தடத்தில், 19 இடங்களில், மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.இந்த திட்டத்தை, 9,744 கோடி ரூபாயில் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாநில மற்றும் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் நிலையங்கள்

அமைவது எங்கே? கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட் ஜங்சன், வாவின் முதல் மெயின் ரோடு, அம்பத்துார் எஸ்டேட், அம்பத்துார் டெலி எக்சேனச், டன்லப், அம்பத்துார், அம்பத்துார் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்துாரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டாபிராம், வெளிட்ட சாலை ஆகிய, 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. ஆவடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்லும் வகையில், அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAAJ68
பிப் 22, 2025 17:52

மெட்ரோ ரயில் போட்டு எதுக்கு இவ்வளவு பணம் ...கொட்டுறீங்க..... சாதாரண பறக்கும் ரயில் மாதிரி போடுங்க எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்.


panneer selvam
பிப் 22, 2025 16:28

Preliminary project proposal is fine , but where to find nearly 10,000 crores ? Already Appa Stalin ji is doing petty quarrel with grandpa Modi ji ? Who will finance for this small metro project ? Just ask your sister to dig out your family kitty and do the project . Otherwise it will remain in paper only


முக்கிய வீடியோ