போலீசை தாக்கி தப்பிய ரவடி கைது
ராயபுரம்,ராயபுரம் போக்குவரத்து காவல் துறையில், ஹரிஹரசுதன், 29, என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். 22 ம் தேதி இரவு, எஸ்.என்.செட்டி சாலை - ஜீவரத்தினம் சாலை சந்திப்பில், பணியில் ஈடுபட்டிருந்தார்.ராயபுரம் நோக்கி சென்ற பைக் ஒன்றில், காதல் ஜோடி அதிவேகமாக வந்தனர். திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை, துாக்கி விட சென்ற ஹரிஹரசுதன், நிதானமாக வரக்கூடாதா என, அறிவுரை கூறி, அவர்களிடம் விபரம் கேட்டுள்ளார். அப்போது, பைக்கில் வந்த வாலிபர், காவலரை தள்ளிவிட்டு, அவருடன் வந்த 19 வயது பெண்ணை விட்டு, புதுமனைகுப்பம் வழியாக தப்பினார். தப்பிய வாலிபர், தண்டையார்பேட்டை, தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஹரிஷ்குமார், 20, என்பது பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.நேற்று ஹரிஷ்குமார் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஹரிஷ்குமார் மீது, பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் தப்பியோடியது தெரியவந்தது.