உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3.66 கோடி நிலமோசடி: சாட்சிகள் கைது

ரூ.3.66 கோடி நிலமோசடி: சாட்சிகள் கைது

ஆவடி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர், கடந்த 28ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:நிலம் வாங்குவது தொடர்பாக, சுரேந்தர் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமுல்லைவாயில், பாலாஜி நகரில் உள்ள 7,200 சதுர அடி நிலத்தின் பொது அதிகாரம் சுரேந்தரிடம் இருந்தது தெரிந்தது.கடந்த நவ., 23ம் தேதி அந்த நிலத்தை, 3.66 கோடி ரூபாய்க்கு விலை பேசி, அம்பத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் என் தந்தை பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டேன். அதில், சுரேந்தரின் நண்பர்களான பாபு மற்றும் பராக்சூடா ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டனர்.மேற்படி இடத்தில் நான் சுற்றுச்சுவர் கட்ட சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த இடம் நாராயணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை தர வாடகைக்கு வாங்கி இருப்பதாக தெரிவித்தார்.மேற்கூறிய நிலம் தொடர்பான வழக்கில், சுரேந்தர் மற்றும் அவரது நண்பர் பாபு ஆகியோர் போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து என்னிடம் விற்று ஏமாற்றியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். நிலமோசடியில், 2 லட்சம் கமிஷன் பெற்று சாட்சி கையெழுத்திட்ட அம்பத்துாரைச் சேர்ந்த, ஜஸ்டின், 45, மற்றும் 40 லட்சம் கமிஷன் பெற்ற நொளம்பூரைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணராவ், 52, ஆகியோரை போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

ஆள்மாறாட்டம் செய்த பெண் சிக்கினார்

கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஷீலா அப்பாவு, 60. இவர், ஜூலை 29 ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் குறிப்பிட்டு இருந்ததாவது: நான், கேரளாவில் வசிக்கும் என் அண்ணன் பிலிப் ஜோசப் என்பவருடன் சேர்ந்து, 1999ல், அம்பத்துார், பட்டரவாக்கம், ஞானமூர்த்தி நகரில் 5,580 சதுர அடி நிலத்தை வாங்கி, இருவரும் தலா 2,790 சதுர அடி நிலத்தை பிரித்து கொண்டோம். அண்ணன் அவரது நிலத்தை, நிலத்தரகர் வாயிலாக, கோவிந்தராஜ் என்பவருக்கு கடந்த 2022ல் விற்றுள்ளார். அருகில் இருந்த என் நிலத்தையும், அதே நிலத்தரகர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளார். என் நிலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுற்றுச்சுவர் கட்டி வருவதாக தகவல் கிடைத்தது. நிலத்தின் வில்லங்க சான்றை சரிபார்த்தபோது, என்னை போல் ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்தது தெரிந்தது. அந்த நிலத்தின் மதிப்பு, 1 கோடி ரூபாய். நிலத்தை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். விசாரித்த போலீசார், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட கொடுங்கையூரைச் சேர்ந்த லீலாவதி, 54, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை