உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜகீழ்பாக்கம் ஏரியில் ஆக்கிரமித்த 126 கட்டடங்கள்... அகற்றம்! கிழக்கு புறவழிச்சாலைக்காக மேம்பாலம் வருகிறது

ராஜகீழ்பாக்கம் ஏரியில் ஆக்கிரமித்த 126 கட்டடங்கள்... அகற்றம்! கிழக்கு புறவழிச்சாலைக்காக மேம்பாலம் வருகிறது

தாம்பரம், :தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தில் முதற்கட்ட பணி 60 சதவீதம் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பணிக்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள 126 கட்டடங்கள் இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த இடத்தில், அகரம்தென் - வேளச்சேரி சாலையை இணைக்கும் வகையில், 850 மீட்டர் துாரத்திற்கு ஆறுவழிப்பாதையுடன், இருவழி உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பொது வாகனங்கள் பெருங்களத்துார், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைந்து, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளில் பயணிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. அதிக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆறு வழிச்சாலை

அதற்கு மாறாக பெருங்களத்துார், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம் வழியாக, தாம்பரம் - வேளச்சேரி சாலையை அடையும் வகையில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் புதிய பாலத்தை ஒட்டியுள்ள, பீர்க்கன்காரணை பழைய காவல் நிலையம் அருகே துவங்கி, சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் கிராமங்கள் வழியாக, வேளச்சேரி சாலையுடன் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது. ௭௫ கோடி ரூபாயில் ஆறுவழிப்பாதையாக அமைக்கப்படும் இச்சாலையின் நீளம் 9 கி.மீட்டர்.இத்திட்டத்தில், சேலையூர் முதல் திருவஞ்சேரி வரை, 3 கி.மீ., துாரத்திற்கு பணிகளை துவக்க, 2013ல் 27.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.முதற்கட்டமாக திருவஞ்சேரி முதல் மப்பேடு வரை, 1.4. கி.மீ., துாரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, பெருங்களத்துார் முதல் அகரம்தென் சாலை மப்பேடு சந்திப்பு வரை, பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.இப்பணிக்காக, 26 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன. 23 இடங்களில், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய 40 சதவீத பணிகள், 2025, மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இரண்டாம் கட்ட பணிக்காக, அகரம்தென் சாலையில், சேலையூர் அம்பேத்கர் நகர் சந்திப்பில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் ஏரி வழியாக வேளச்சேரி சாலை வரை பணி துவக்கப்பட உள்ளது.அதற்காக, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 126 கட்டடங்களை இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர். கட்டடங்கள் இடிக்கப்பட்ட பின், அம்பேத்கர் நகர் சந்திப்பு முதல் வேளச்சேரி சாலை ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் வரை, 850 மீட்டர் துாரத்திற்கு ஆறுவழிப்பாதை உடைய, இருவழி உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது.இதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டு, 2025, மார்ச் மாதத்திற்குள் டெண்டர் கோரப்பட உள்ளது. ஒன்பது மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வீடுகள் ஒதுக்கீடு

தாம்பரம் - வேளச்சேரி சாலை பணிக்காக, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதில், பலருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வீடு ஒதுக்கப்பட்டு விட்டது. இன்னும் பலருக்கு இதுவரை டோக்கன் கொடுக்கப்படவில்லை.அதனால், அந்த குடியிருப்புவாசிகள் செய்வதறியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், எஞ்சிய குடியிருப்புவாசிகளையும் கணக்கிட்டு, அவர்களுக்கும் வீடுகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:தாம்பரம் - வேளச்சேரி சாலை பணிக்காக, ராஜகீழ்ப்பாக்கத்தில் 126 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன. இதில், 69 குடியிருப்புவாசிகளுக்கு, மாம்பாக்கம் அடுத்த முருகமங்கலத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.மற்றவர்களுக்கு வீடு ஒதுக்க, அவர்களிடம் விபரம் சேகரிக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்பணி முடிந்ததும், மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக, அவர்களுக்கு வீடு ஒதுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழித்தடம்

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் கனரக சரக்கு மற்றும் பொது போக்குவரத்து வாகனங்கள், எளிதாக வேளச்சேரி வழியாக, சோழிங்கநல்லுார் இ.சி.ஆர்., சாலையை அடைய முடியும்.அதேபோல், வேளச்சேரி சாலை வழியாக வரும் வாகனங்களும், இதே பாதையில் ஏறி, பெருங்களத்துாரில் இறங்கி ஜி.எஸ்.டி., சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கும் செல்லலாம்.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பெருங்களத்துார் முதல் மப்பேடு சந்திப்பு வரையிலான முதற்கட்ட பணியில் 60 சதவீதம் முடிந்துவிட்டது. 40 சதவீத பணிகள் மட்டுமே உள்ளன.பெருங்களத்துாரில் இருந்து செல்லும் வழியில், 2,800 அடி துாரத்திற்கு வனத்துறை இடத்தில் சாலை அமையவுள்ளது. இதற்காக, 2.50 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுவிட்டது.வனத்துறை இடத்தில் அகற்றப்படும் மரங்களுக்கு பதில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், 2,610 மரங்கள் நடப்படு உள்ளன. ஆனால், வனத்துறையிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதேபோல், இடையில் உள்ள துணை மின் நிலையத்தையும் அகற்ற வேண்டும். இவ்விஷயத்தில் மின் வாரியம் மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதை விரைந்து அகற்றி கொடுத்தால், எஞ்சிய பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.இரண்டாம் கட்ட பணியில், அகரம்தென் சாலையில், சேலையூர் அம்பேத்கர் நகர் சந்திப்பில் இருந்து 850 மீட்டர் துாரத்திற்கு, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் மீது ஆறுவழிப்பாதை உடைய இருவழி உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது.இதற்காக விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, வரும் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் கோரப்படும். சேலையூர் அம்பேத்கர் நகரில் துவங்கும் பாலம், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலை ஒட்டி, தாம்பரம் - வேளச்சேரி சாலையுடன் இணையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vivekanandan G
டிச 08, 2024 09:27

This project being delayed more than twenty years. Lets hope the Eastern Bypass would have completed Both phase I & II well in time so as to overcome traffic congestion presently at Tambaram East, Chennai. I appreciate the present government / authorities concerned for taking active steps to complete the project even though its initiated during AIDMK regime. Thanks to Dinamalar showing interest in the project and periodic reminders in our Chennai Edition frequently.


முக்கிய வீடியோ