உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.15 கோடியில் நவீன மீன் அங்காடி அமைத்தும்...பயனில்லை !:லுாப் சாலையை ஆக்கிரமித்து தொடரும் வியாபாரம்

ரூ.15 கோடியில் நவீன மீன் அங்காடி அமைத்தும்...பயனில்லை !:லுாப் சாலையை ஆக்கிரமித்து தொடரும் வியாபாரம்

பட்டினப்பாக்கம், லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாயில் நவீன மீன் அங்காடி அமைத்து கொடுத்தும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, 50க்கும் மேற்பட்ட மீனவர்கள், லுாப் சாலையோரம் மீன் வியாபாரம் செய்வதை தொடர்கின்றனர். தேவையான வசதிகளை செய்து கொடுத்தும், மீன் அங்காடி செல்லாமல் அத்துமீறலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது, அரசு நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சென்னையில், மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி, பட்டினம்பாக்கம், லுாப் சாலையில், 14.93 கோடி ரூபாயில், நவீன மீன் அங்காடி கட்டப்பட்டது. கடந்த ஆக., 12ல், முதல்வர் ஸ்டாலின், மீன் அங்காடியை திறந்து வைத்தார். இங்கு, நொச்சிநகர், நொச்சிகுப்பம், டுமில் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு, குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டன.ஆனால், 50க்கும் மேற்பட்டோர், அங்கு வியாபாரம் செய்ய மறுத்து, லுாப் சாலையோரம் தொடர்ந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.இந்நிலையில், வியாபாரத்தை முறையாக கையாளுவது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.அதன் விபரம்:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, மீன் வளர்ச்சி துறை, மாநகராட்சி இணைந்து, கணக்கெடுப்பு நடத்தியது. அனைத்து வசதிகளும் செய்து, கடைகளை ஒதுக்கி கொடுத்துள்ளோம்.வியாபாரம் செய்யும் பலர், மீன் அங்காடியை பயன்படுத்துகின்றனர். சிலர், லுாப் சாலையில் வியாபாரம் செய்கின்றனர். அனைத்து வியாபாரிகளும், அக்.,19ம் தேதி முதல், மீன் அங்காடியில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும், அங்காடியில் மட்டுமே மீன் வாங்க வேண்டும். அவர்களுக்கு, இலவசமாக வாகன நிறுத்தம் வசதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றை கண்காணிக்க, மாநகராட்சி, போக்குவரத்து போலீஸ் சிறப்பு குழு அமைக்கப்படும். புறக்காவல் நிலையமும் திறக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிந்து, ஐப்பசி பிறந்து மூன்றாவது நாளான நேற்று, வார விடுமுறை என்பதால், அசைவ பிரியர்கள் மீன் வாங்க, லுாப் சாலையில் கூடினர். சில வியாபாரிகள் தான், மீன் அங்காடியில் வியாபாரம் செய்தனர். மற்றவர்கள், லுாப் சாலை வலது பக்கமாக வரிசையாக அமர்ந்து, வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தினர். இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் மீனவர்களிடம் பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. அடுத்தக்கட்ட பேச்சு நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்ய வலியுறுத்தப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.நொச்சிக்குப்பம் வியாபாரிகள் கூறியதாவது:குறுகலான இடத்தில் மீன் வியாபாரம் செய்ய முடியவில்லை. முன் வியாபாரம் அதிகமாக இருந்தது. குலுக்கல் முறையில், கடைகளை பின்னால் ஒதுக்கியதால், பொதுமக்கள் எங்கள் பக்கம் வருவதில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.சிலருக்கு கடையும் ஒதுக்கவில்லை. தவிர, கடையும் சிறிய அளவில் உள்ளது. போதிய வசதிகள் இல்லாததால், லுாப் சாலையில் வியாபாரம் செய்கிறோம். சாலையில் தடுப்பு அமைத்தால், பேரிடர் காலங்களில் படகுகளை வெளியே எடுப்பதில் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு நடவடிக்கை தேவை

குலுக்கல் முறையில் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கப்பட்டன. பின் வரிசையில் கடைகள் கிடைத்தவர்கள், முன் வரிசையில் தான் வேண்டும் என, அடம் பிடித்து வருகின்றனர். அதனால், லுாப் சாலையிலேயே அவர்கள் கடைகளை நடத்துவதால், அங்காடியில் கடைகள் வைத்தும் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இப்படியே போனால், நாங்களும் லுாப் சாலையோரமே வியாபாரம் செய்ய வேண்டியதுதான். அனைத்து வியாபாரிகளையும் அங்காடிக்கு மாற்றினால்தான், நுகர்வோர் கூட்டம் வரும்; வாழ்வாதாரமும் கிடைக்கும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வியாபாரிகள், அங்காடியில் கடை நடத்துவோர்

2 அடி உயரத்தில் தடுப்பு

மீனவர்களிடம் கருத்து கேட்பு நடத்தி தான், நவீன மீன் அங்காடி கட்டி உள்ளோம். சமமாக ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறையில் தேர்வு செய்தோம். இவ்வளவு வசதி செய்தும், சாலையில் வியாபாரம் செய்வது, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக உள்ளது. சாலையில் இடது பக்கம், 2 அடி உயரத்தில் தான் தடுப்பு அமைக்கிறோம். இதனால், கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. - மாநகராட்சி அதிகாரிகள்

நவீன மீன் அங்காடி வசதிகள்

2 ஏக்கர்மொத்த இடம்50 ஆயிரம்அங்காடி சதுர அடி360கடைகள் 67கார் நிறுத்தலாம்84பைக் நிறுத்தலாம்4 கோடி லிட்டர்கழிவுநீர் சுத்திகரிப்புநிலையம் மீன் வெட்ட தனி இடம், குடிநீர், கழிப்பறை, மின்விளக்குகள் போன்ற வசதிகள் உள்ளன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
அக் 22, 2024 05:51

வந்தே பாரத் ரயில் உட்டாலும் டாய்லெட் பக்கத்துல உக்காந்துகிட்டு போற சுகமே தனி. அதே மாதிரி நவீன அங்காடி வெச்சு பாதுகாப்பா விக்கச் சொன்னாலும் நடுரோட்டில் விக்கிற மீன்ருசியே தனி கோவாலு.


panneer selvam
அக் 21, 2024 23:31

DMK government always at anytime is spineless . Any minor group could do blackmail the government . Thanks to their Dravidian Ideology of pleasing everyone , even our police force become non violent and every policeman becomes a Gandiyan except on Bribes


முக்கிய வீடியோ