விற்பனை குழு தேர்தலுக்கு 194 பேர் வேட்புமனு தாக்கல்
சென்னை, சென்னை மாநகராட்சி எல்லையில், 2023ம் ஆண்டு கணக்கெடுப்புபடி, 35,588 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதை மீறியும், சாலையோர ஆக்கிரமிப்புகள் புற்றீசல் போல் அதிகரித்துள்ளன.இதை ஒழுங்குப்படுத்த 150 விற்பனை செய்யக்கூடிய பகுதிகளாகவும், 188 இடங்கள் விற்பனை செய்யக்கூடாத பகுதிகளாகவும், மாநகராட்சி வரையறுத்தது.மாநகராட்சி எல்லையில் 561 சாலைகள், 35,730 தெருக்கள் மற்றும் 70 சந்தை பகுதிகள் உள்ளதால், இங்குள்ள 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளை, ஒரு நகர விற்பனை குழுவால் கண்காணிக்க முடியாத நிலை உள்ளதால், மண்டலத்திற்கு ஒன்று வீதம், 15 நகர விற்பனை குழு அமைக்க முடிவானது.இதையடுத்து, மண்டலம் வாரியாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - சிறுபான்மையினர் - மாற்றுத்திறனாளிகள் - மகளிர் - பொது பிரிவினர் என, ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு விண்ணப்பம், 16, 17ம் தேதியில் மண்டலங்களில் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், 234 வியாபாரிகள் தேர்தலில் நிற்பதாக வேட்புமனு வாங்கி சென்றனர். நேற்று, வியாபாரிகள் வேட்புமனுவை மண்டல வருவாய் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர்.இதில், ஆதிதிராவிட பழங்குடியினர் 32 பேர், பொது பிரிவினர் 40, மகளிர் 36, மாற்றுத்திறனாளிகள் 26, சிறுபான்மையினர் 32, இதர பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் 28 என, 194 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, இன்று நடக்கிறது. நாளை, மனு வாபஸ் பெறுதல் மற்றும் இறுதி பட்டியல் வெளியிடப்படும். வரும் 26ம் தேதி தேர்தலும், 27ல் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கும்.