உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அவசரத்துக்கு தரையிறங்க 2 மணி நேரமா? ஏர்போர்ட் மீது கேரள எம்.பி., காட்டம்

அவசரத்துக்கு தரையிறங்க 2 மணி நேரமா? ஏர்போர்ட் மீது கேரள எம்.பி., காட்டம்

சென்னை, 'விமானம் அபாய கட்டத்தில் இருக்கும்போது, அவசரமாக தரையிறங்க அனுமதி கிடைப்பதற்கே இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது' என, சென்னை விமான நிலையத்தின் மீது கேரள எம்.பி., கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டில்லிக்கு, ஐந்து எம்.பி.,க்கள் உட்பட 150 பேருடன் 'ஏர் இந்தியா' விமானம் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. வானில் நீண்ட நேரம் வட்டமடித்த பின் தான், விமானம் சென்னையில் தரையிறங்கியது. இது குறித்து, கேரள காங்கிரஸ் எம்.பி.,யும் முன்னாள் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சருமான கே.சி.வேணுகோபால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில், விமானம் முன் எப்போதும் காணாத அதிர்வலைகளை சந்தித்தது. ஒரு மணி நேரத்துக்கு பின், சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக விமானி அறிவித்து, சென்னை நோக்கி திரும்பினார். இரண்டு மணி நேரம் வட்டமடித்த பின் தான், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்தது. முதல் முறை தரையிறங்க முற்பட்டபோது, ஓடுபாதையில் வேறு விமானம் இருப்பதாக தகவல் வந்தது. எங்களை காப்பாற்றியது விமானியின் திறமையும் அதிர்ஷ்டமும் தான். பயணியர் பாதுகாப்பு அதிர்ஷ்டம் சார்ந்து இருக்கக் கூடாது. இந்நிகழ்வை விமான போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ