3 விரைவு ரயில்கள் வழக்கம்போல் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்
சென்னை, 'சென்னை - மதுரை பாண்டியன் உட்பட மூன்று விரைவு ரயில்கள், எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில், 734.91 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. ரயில் நிலையத்தின் உட்பகுதிகளில், புதிய நடைமேம்பாலம் அமைப்பது, நடைமேடைகளில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இங்கிருந்து செல்லும் மேலும் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, எழும்பூர் - திருச்சி ராக்போர்ட், எழும்பூர் - மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் உள்ளிட்ட விரைவு ரயில்கள், செப்., 11 முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என, கடந்த 5ம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது. இது, பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பண்டிகை நெருங்கும் நேரத்தில், இதுபோன்ற மாற்றத்தை தவிர்க்க வேண்டும் என, பயணியரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, பயணியர் நலனை கருத்தில் கொண்டு, சில மாற்றங்களை செய்து, நேற்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, சென்னை எழும்பூர் - திருச்சி ராக்போர்ட், எழும்பூர் - மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய விரைவு ரயில்கள், எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும். இருப்பினும், எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி., விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் நேற்று முதல் நவ., 10 வரை இயக்கப்படுகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் தொடர்பான பெரும்பாலான அறிவிப்புகள், கடைசி நேரத்தில் வருவதால், தகவல்களை தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக, பயணியர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.