கொருக்குப்பேட்டை தரைப்பாலம் மூழ்குவதை தடுக்க 3 அடி அதிகரிப்பு
கொருக்குப்பேட்டை, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.சென்னை, கொருக்குப்பேட்டை, தீயணைப்பு நிலையம் அருகே, எழில் நகரில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த ரயில் பாதைகளுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளான எழில் நகர், எம்.ஜி.ஆர்., நகர், நேரு நகர், கார்னேசன் நகர், குமரன் நகர், அஜீஸ் நகர், சந்திரசேகர் நகர், கருமாரியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர்.இங்கு ரயில் போக்குவரத்திற்காக, தினமும் 20 முறைக்கு மேல் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.மணலி, தண்டையார்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அவசர சேவை வாகனங்களும் தினமும் நெரிசலில் சிக்கின. எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, அரசுக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரயில்வே பாதை, சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்ட, மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், எழில் நகர் ரயில்வே கிராசிங்கில், 105 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2023, மார்ச் மாதம், கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பணிகளை துவக்கி வைத்தார். மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வாகன நெரிசலை குறைக்கும் வகையில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்ச ரூபாய் செலவில், அன்னை சத்யா நகர், சுண்ணாம்பு கால்வாய் ரயில்வே இணைப்பு சாலையில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.இப்பணிகள் முடிவடைந்து, செப்., 11ல் ஆர்.கே.நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., எபினேசர், எழில் நகர் மாற்றுப்பாதையை திறந்து வைத்தார்.தற்போது மேம்பாலப்பணிகள், 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேம்பாலத்திற்கு சர்வீஸ் சாலையில், 25 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலத்திலும் கொருக்குப்பேட்டை தரைப்பாலம் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து எம்.எல்.ஏ., எபினேசர் கூறியதாவது:மழைக்காலங்களில் கொருக்குப்பேட்டை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து சேவை தடைபட்டு வந்தது. இதைத் தவிர்க்கும் வகையில், 3 அடி உயரத்திற்கு தரைப்பாலம் உயர்த்திக் கட்டப்பட்டு வருகிறது.மேம்பாலப் பணிகள் இருபுறமும் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், ரயில்வே பணிகள் 10 சதவீதம் உள்ளது. ரயில்வே துறை சார்பில், 72 மீட்டர் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்க, துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பணிகள் துவக்குவதாக உறுதியளித்துள்ளனர். எனவே ஜனவரிக்குள், பாலப்பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.