ரூ.1 கோடி நிலம் அபகரித்த 4 பேர் கைது
சென்னை,:போலி ஆவணங்கள் மூலம் 1 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.எழும்பூர் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மேரிபிரான்சிஸ். இவருக்கு, அப்பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் உள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார்.இந்த நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்த மர்ம நபர்கள், வீடு கட்டி விற்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து மேரிபிரான்சிஸ் சார்பில், அவரது அதிகார முகவரான ஜான் மகேந்திரன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில், எழும்பூரைச் சேர்ந்த ரபிபேக், 64, ஜூலி, 40, ரபிபேக் மகன் இம்ரான், 27 மற்றும் செம்மஞ்சேரியைச் சேர்ந்த ரோஸி, 64, ஆகியோர் வாரிசு சான்று, பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரித்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் உடந்தையாக இருந்த சம்பத்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.