பேச்சுலர் அறையில் புகுந்து 4 போன், பணம் திருட்டு
சேலையூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக், 29. சேலையூர், இந்திரா நகரில் தங்கி, தரமணியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.கார்த்திக்குடன், மேலும் நான்கு பேர் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, அறையின் கதவை திறந்து வைத்து துாங்கினர்.நேற்று காலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த மூன்று மொபைல் போன்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கதவை திறக்க முயன்றனர்.முடியாததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, வெளியே போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்தனர்.விசாரணையில், மூன்று மொபைல் போன்கள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை திறந்து, அதிலிருந்த 1,500 ரூபாய் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதேபோல், பக்கத்து வீட்டு மாடியில் இருந்து, ஒரு மொபைல் போன், 2,000 ரூபாய் ஆகியவற்றையும், மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.