உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துார் மண்டலம் முழுதும் 80 சதவீத நாய்களுக்கு தடுப்பூசி

ஆலந்துார் மண்டலம் முழுதும் 80 சதவீத நாய்களுக்கு தடுப்பூசி

ஆலந்துார், ஆலந்துார் மண்டலத்தில் உள்ள, 4,875 தெரு நாய்களில், 3,885 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பு மற்றும் அகப்புற ஒட்டுண்ணி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரில் தெரு நாய்களின் தொல்லை, சில மாதங்களாக பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மேலும், பல இடங்களில் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரை, நாய்கள் கடித்து காயப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக, நீதிமன்றமும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி, நகரம் முழுதும் சுற்றும் தெரு நாய்களுக்கு எதிராக, புதிய திட்டத்தை கடந்த மாதம் துவங்கி, 50 நாட்களில் 1.5 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், ஆலந்துார் மண்டலத்தில், 80 சதவீத தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தெரு நாய்கள் கணக்கெடுப்பு திட்ட மதிப்பீட்டின் படி, ஆலந்துார் மண்டலத்தில், 4,875 நாய்கள் உள்ளன. அவற்றுக்கு வெறி நோய் தடுப்பு மற்றும் அகப்புற ஒட்டுண்ணி தடுப்பூசி செலுத்த, ஆறு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதற்காக, 10 குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு வாகனம், இரண்டு கால்நடை மருத்துவர்கள், ஐந்து உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும், சராசரியாக 650 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினோம். இதுவரை, 3,885 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடாத நாய்கள் உள்ள பகுதிகள், செயலி வாயிலாக கண்டறியப்பட்டு, அவற்றுக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை