உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலில் இறங்கி போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் 90 பேர் கைது

கடலில் இறங்கி போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்கள் 90 பேர் கைது

சென்னை: துாய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய மாநகராட்சியை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், துாய்மை பணியாளர்கள், மெரினா கடலில் இறங்கி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய 90 பேரை போலீசார் கைது செய்தனர். ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும், ஆக., 1 முதல் 13ம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா, மெரினா உழைப்பாளர் சிலை என, அடுத்தடுத்து போராட்டங்களில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தீபாவளி பண்டிகையின்போதும், 'சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனுக்கு, கருப்பு தீபாவளி வாழ்த்துக்கள்' என போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று காலை மெரினாவில், கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி, துாய்மை பணியாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து, திருவல்லிக்கேணி, அண்ணாசதுக்கம் போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், கடலில் இறங்கி போராடியவர்களை பத்திரமாக கரையில் சேர்த்தனர். பின், போராடிய துாய்மை பணியாளர்களை, டிராக்டர் வாகனத்தில் அணுகு சாலைக்கு அழைத்து வந்து, 90 பேரையும், சமூக நலக்கூடத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர். துாய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக, மெரினாவுக்கு வந்த சுற்றுலா பயணியரையும் விசாரணைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர். மெரினா கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களை குண்டுகட்டாக துாக்கி வந்து கைது செய்த போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை