உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்த தாய்

பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்த தாய்

1 வயது குழந்தை பலி; தாயும் தற்கொலை முயற்சிகீழ்ப்பாக்கம்'உடல் நிலை பாதிப்பால், தனக்கு பின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை' என, கடிதம் எழுதி வைத்து, பெற்ற இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.சென்னை, பெருங்கொளத்துாரைச் சேர்ந்தவர் ராம்குமார், 34; கூரியர் நிறுவன ஊழியர். இவரது மனைவி திவ்யா, 32. இவர்களது குழந்தைகள், லக்சன் குமார், 4, புனித்குமார், 1.தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஒன்றரை மாதமாக திவ்யா குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கம், புல்லாபுரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், வீட்டில் குழந்தைகளின் பலத்த அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. அப்போது, ஆந்திராவில் இருந்து திவ்யாவின் அத்தை வந்துள்ளார். அவரும் கதவை பலமுறை தட்டிய பின், சில நிமிடம் கழித்து கழுத்தில் ரத்தம் வழிந்தபடி, திவ்யா கதவை திறந்துள்ளார்.அதிர்ச்சியடைந்தவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் சிறுவன் லக்சன் குமார் கழுத்தில் ரத்த காயத்துடன் அழுதுக் கொண்டிருந்தான். கழிப்பறையில், ஒன்றரை வயது குழந்தை, பின் பக்கம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்ப்பாக்கம் போலீசார், குழந்தையின் உடலையும் மற்ற இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தாயும், மகனும் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.திவ்யா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், 'எனது குடும்பத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது. எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படுவதால், எனக்கு பின் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என, கடிதத்தில் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ