உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைபர் மோசடியில் வாகன ஓட்டிகள் சிக்குவதை தவிர்க்க புது முயற்சி!

சைபர் மோசடியில் வாகன ஓட்டிகள் சிக்குவதை தவிர்க்க புது முயற்சி!

சென்னை:விதிமீறல் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, கருவூலத்தில் செலுத்தாமல், போலீசார் வட்டிக்கு விட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், சென்னையில், 15 இடங்களில் நேரடி வசூல் மையங்களை, சென்னை மாநகர காவல் துறை திறந்துள்ளது. 'அபராத தொகை செலுத்துங்கள்' என மர்ம நபர்கள், 'போலி லிங்க்' அனுப்பி நடத்தும் சைபர் மோசடிகளை தடுக்கவும், போலீசார் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகர போலீஸ் எல்லையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, 55 காவல் நிலையங்கள் உள்ளன. வீதிமீறல் வாகன ஓட்டிகளிடம் நேரடியாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாகவும், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை, நடமாடும் நீதிமன்றங்கள், அரசின் கருவூலங்களில் முறையாக செலுத்தப்பட வேண்டும். ஆனால், பல காவல் நிலையங்களில், போலீசார் வசூலித்த அபராத தொகை, கருவூலங்களில் செலுத்தப்படாமல் கமுக்கமாக வைத்து, சொந்த உபயோகத்திற்கும், வட்டிக்கும் விட்டு கல்லா கட்டி வந்தது, சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வகையில், ஆறு கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்படாமல் இருந்தது அம்பலமானது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட, 10 காவல் நிலையங்களில் உள்ள யாரும், நிலுவை தொகையை செலுத்தும் வரை, வழக்குகள் பதிவு செய்ய, போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தடை விதித்திருந்தார். இந்நிலையில், அபராதம் விதிப்பு குறித்த விபரம், வாகன உரிமையாளர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. அந்த குறுஞ்செய்திகளில் அபராதம் செலுத்துவதற்கான, 'லிங்க்'குகளும் இடம்பெறுகின்றன. ஆனால், சைபர் குற்றவாளிகள் போலியான இணையதள இணைப்புகளை அனுப்பி, அவற்றை, 'கிளிக்' செய்ய வைப்பதன் மூலம், வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், உண்மையான அபராத தகவலுடன் வரும் இணைப்புகளையும் வாகன ஓட்டிகள் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இதை தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு நிலுவையில் உள்ள அபராத விபரங்களை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், சென்னையில், 15 இடங்களில், 'கால் சென்டர்கள்' எனும் அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இது, அபராத தொகை வசூலிப்பு மையங்களாகவும் செயல்படும். வாகன உரிமையாளர்கள், இந்த மையங்களுக்கு சென்று, அபராத விபரங்களை அறிந்து கொள்வதுடன், நிலுவையில் உள்ள அபராத தொகையையும் செலுத்தலாம். இந்த மையங்கள், காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இம்மாதம் 30-ம் தேதி வரை செயல்படும். வாகன ஓட்டிகள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தலாம். மேலும், ஒரே விதிமீறலை மீண்டும் மீண்டும் செய்யும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்வது, ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும், இந்த மையங்கள் வாயிலாக எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். எந்தெந்த இடங்களில்? * காவல் நிலையங்கள்: மதுரவாயல், மாதவரம் போக்குவரத்து, யானைகவுனி, புதுவண்ணாரப்பேட்டை, செம்பியம், மாம்பலம், அடையாறு ஆகிய காவல் நிலையங்களிலும், வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன * காவல் உதவி மையங்கள்: ஐ.சி.எப்., - மியூசிக் அகாடமி, அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலை சந்திப்பு, ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பு, அண்ணாநகர் ரவுண்டானா, அண்ணா நகர் வளைவு, கத்திப்பாரா மேம்பாலம் கீழ் உள்ள புனித தோமையர் மலை ஆகிய காவல் உதவி மையங்களிலும் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 17, 2026 06:38

திருட்டு, ஊழல் எல்லாம் நம்ம DNA விலே இருக்கு. அதை மாத்த முடியுமா?


Kalyanaraman
செப் 17, 2026 01:24

மாநிலம் முழுவதும் பரவலாக தபால் அலுவலகமும், ஏர்டெல் அலுவலகமும் உள்ளது. இங்கு அபராத தொகையை செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டால் அரசுக்கும் பணம் மிச்சம் மக்களுக்கும் சௌகரியமாக இருக்கும்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி