துணைமின் நிலையத்தில் விபத்து: ஊழியர் படுகாயம்
வியாசர்பாடி:வியாசர்பாடி துணைமின் நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், மின்சாரம் பாய்ந்து, வடமாநில ஒப்பந்த ஊழியர் படுகாயமடைந்தார்.ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மேத்தா, 30. இவர், மணலியில் தங்கி, மணலி எம்.எப்.எல்., மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.வியாசர்பாடி, வள்ளலார் கோவில் எதிரே உள்ள வியாசர்பாடி துணைமின் நிலையத்தில், மேலே செல்லும் டவர் மின்சாரத்தில், நேற்று பழுது ஏற்பட்டுள்ளது.இதில் பழுதுபார்க்கும் பணியில், ஒயர் மேன்கள் வெற்றி கிருஷ்ணன், ரூபேஷ் மார்த்தோ, தாமோதரன் மற்றும் சுரேஷ் மேத்தா ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக சுரேஷ் மேத்தா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.சக ஊழியர்கள் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, 54 சதவீத தீக்காயங்களுடன் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.