உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்காணிப்பின்றி மந்தகதியில் நடக்கும் பணிகள் ஆலந்துார் மண்டல அலுவலர்களுக்கு எச்சரிக்கை

கண்காணிப்பின்றி மந்தகதியில் நடக்கும் பணிகள் ஆலந்துார் மண்டல அலுவலர்களுக்கு எச்சரிக்கை

ஆலந்துார்;''மண்டலத்தில் பணிகள் சரிவர நடப்பதில்லை. நடக்கும் பணிகளையும் அலுவலர்கள் கண்காணிப்பது இல்லை,” என, ஆலந்துார் மண்டல குழு கூட்டத்தில், தலைவர் சந்திரன் அலுவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆலந்துார் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், உதவி வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: செல்வேந்திரன், தி.மு.க., 156வது வார்டு : வார்டு முழுதும், 25 பூங்காக்கள் உள்ளன. ஒப்பந்ததாரர்கள் அவற்றை முறையாக பராமரிப்பதில்லை. இதனால், பல பூங்காக்கள் பொலிவிழந்துள்ளன. சில இடங்களில், குழாய் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. குளோரின் சரியான அளவில் கலப்பதில்லை. அமுதப்பிரியா, தி.மு.க., 159வது வார்டு: வார்டு முழுதும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பருவமழைக்கு முன் அவற்றை சீரமைக்க வேண்டும். சாலமோன், தி.மு.க., 162வது வார்டு: மில்லிங் செய்து பல நாட்கள் அகியும் சாலை அமைக்கப்படவில்லை. எம்.கே.என்., சாலை மழைநீர் வடிகால்வாயில் மண் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பருவமழை துவங்கும் முன், அவற்றை சீரமைக்க வேண்டும். பூங்கொடி, தி.மு.க., 163வது வார்டு: நியூ காலனி உள்ளிட்ட சில தெருக்களில், மில்லிங் செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் சாலை அமைக்கப்படவில்லை. ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. பருவமழை துவங்கும் முன், பணிகளை முடிக்க வேண்டும். தேவி, தி.மு.க., 164வது வார்டு: நேரு காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கு மருந்துகளும் இருப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் பேசினர். மண்டலக்குழு தலைவர் சந்திரன் பேசியதாவது: ஆலந்துார் மண்டலத்தில் பணிகள் சரிவர நடப்பதில்லை. நடைமேம்பால திட்டம் பூஜையோடு நிற்கிறது. திருவள்ளுவர் நகரில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் துவக்கப்படவில்லை. சாலைகள் தரமாக போடப்படுகின்றனவா, மழைநீர் வடிகால்வாய் முறையாக துார்வாரப்படுகிறதா என, அலுவலர்கள் ஆய்வு செய்வதில்லை. எந்த பணியையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் கவனிப்பது இல்லை. இதே நிலை நீடித்தால், நடவடிக்கை வேறு விதமாக இருக்கும். அதேபோல், குடிநீர் வாரியத்தால் ஏற்படும் அவப்பெயர், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் குப்பை தேங்குவதை 'உர்பேசர ் ' மேற்பார்வையாளர்கள் கவனிப்பதில்லை. கவுன்சிலர்கள் தகவல் தெரிவித்தால் தான், குப்பையை அகற்றும் நிலை உள்ளது. இது மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், 35 தீர்மா னங்கள் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை