ஒரே அனுமதி சீட்டில் நாள் முழுதும் சவுடு மண் கடத்தல்.. அம்பலம்! ஆந்திர கும்பலுக்கு துணைபோகும் தமிழக அதிகாரிகள்
- நமது நிருபர் - ஒரே ஒரு அனுமதி சீட்டு மட்டும் வாங்கி, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாள் முழுதும் சவுடு மண் கடத்தல் நடப்பது அம்பலமாகி உள்ளது. கடத்தல் கும்பலுக்கு, தமிழக கனிம வளத்துறை உயர் அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இதற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, எண்ணுார் - மாமல்லபுரம் ஆறு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றிலும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன. அந்த பணிகளுக்கு தேவையான, சவுடு மண், கிராவல் மண் எடுக்க, திருவள்ளூர் மாவட்டத்தில், 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் குவாரிகள் இயங்கி வந்தன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனி நபர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளுக்காக, 10க்கும் மேற்பட்ட இடங்களில், வணிக குவாரிகள் இயங்கி வந்தன. சட்டசபை தேர்தல் காரணமாக, பணம் பரிமாற்றத்தை தவிர்க்கும் வகையில், தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, அனைத்து குவாரிகளும் மூடப்பட்டன. இதனால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், கட்டுமான பகுதிகளுக்கு தேவையான குண்டு கல், கிராவல் மண், சவுடு மண் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் லாரி உரிமையாளர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு சவுடு மண் விற்பனைக்காக, ஆந்திராவில் இருந்து, தினமும், 500க்கும் மேற்பட்ட லோடுகளில், மண் கடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில், சத்தியவேடு, காரூர், வி.ஆர்.கண்டிகை, பீரகுப்பம், பிச்சாட்டூர் உள்ளிட்ட, தமிழக எல்லை அருகில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. அங்கிருந்து, தமிழகத்திற்கு சவுடு மண், கொண்டு வரப்படுகிறது. ஆந்திராவில், ஒரே ஒரு அனுமதி சீட்டு வழங்கி, நாள் முழுதும் சவுடு மண் கடத்தல் நடப்பது அம்பலமாகி உள்ளது. இதனால், ஆந்திரா மற்றும் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மண் கடத்தலும் தாரளமாக நடந்து வருகிறது. இதற்கு, தமிழக கனிம வளத்துறை உயர் அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தைச் சேர்ந்த, டிப்பர் லாரிகள் உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர், சங்க உறுப்பினர் குழுவில் அறிவுறுத்தியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது, சவுடு மண் குவாரிகள் செயல்படாத நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சவுடு மண் எடுத்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளில், ஒரு முறை மண் எடுக்க, 'பர்மிட்' வழங்கி, அதை நாள் முழுதும் பயன்படுத்துமாறு கூறுகின்றனர். அவ்வாறு, ஒரே 'பர்மிட்'டில் மண் கொண்டு வந்தால், நமக்கு தான் பாதிப்பு. எனவே, ஒவ்வொரு நடைக்கும், ஒரு 'பர்மிட்' வாங்கி, தமிழகத்திற்கு சவுடு மண் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் நடவடிக்கையில் இருந்து நாம் தப்ப முடியும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். லாரிகள் பறிமுதல் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், கடந்த வாரத்தில், ஊத்துக்கோட்டை சோதனை சாவடி அருகில் சோதனை நடத்தி, போலி பில் வாயிலாக மண் கடத்தி வந்த, மூன்று லாரிகளை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தது. நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என, கணக்கு காட்டியுள்ளனர். இதுகுறித்து, திருவள்ளூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் சவுடு மண் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, ஆந்திர மாநிலத்தில் இருந்து, பொன்பாடி, சத்தியவேடு, ஊத்துக்கோட்டை, எளாவூர் உள்ளிட்ட தமிழக எல்லை வழியாக தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில், சவுடு மண் கடத்தி வரப்படுகிறது. போலி ரசீது மற்றும் ஒரே ஒரு அனுமதி சீட்டை வைத்து, இந்த கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. லாரிகள் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கையால் தெரிய வருகிறது. கனிம வளத்துறை உயர் அதிகாரியோ, 'எந்த ஆட்சி வந்தாலும் கவலை இல்லை; எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என, கடத்தல் கும்பலுக்கு துாபம் போடுகிறார். இதுவே, மண் கடத்தல் அதிகரிக்க காரணம். இவ்வாறு, கனிம வளத்துறையின் உயர் அதிகாரிகள் முதல் எல்லையில் சோதனை செய்யும் போலீசார் வரை, கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக செயல்படுகின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், மண் கடத்தலை தடுக்க எல்லை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கனிம வளத்துறையினரும் சிறப்புக் கவனம் செலுத்தி கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் மீதான அவப்பெயரை போக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதிகாரிகள் மவுனம் தமிழகத்தில் இருந்து மணல், ஜல்லி, சவுடு மண் போன்றவை வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. அதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். அதே நேரத்தில், ஆந்திராவில் இருந்து, போலி ஆவணங்கள் அடிப்படையில் ஆற்று மணல், சவுடு மணல் ஆகியவை வருகின்றன. இது குறித்து புகார் அளித்தால், கனிம வளத்துறை அதிகாரிகள் மவுனமாக உள்ளனர். இது தொடர்பான தகவல்களை திரட்டி வருகிறோம். தேர்தல் பணிகள் முடிந்துள்ள நிலையில், புதிய ஆட்சி அமைந்ததும், இது தொடர்பாக தலைமை செயலரிடம் புகார் அளிக்க தயாராகி வருகிறோம். - எஸ்.யுவராஜ், தலைவர், தமிழக மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு.