வாசகர்கள் கருத்துகள் ( 1 )
When will they increase the FSI?
சென்னை: அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு மீண்டும் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர் பகுதியில் அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் கோரி வரும் விண்ணப்பங்களை, பல்வேறு துறை வல்லுனர்கள் அடங்கிய குழு பரிசீலனை செய்யும். இந்த குழு அறிக்கை, சி.எம்.டி.ஏ., குழும கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இதன் பரிந்துரை அடிப்படையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒவ்வொரு கட்டுமான அனுமதிக்கும் அரசாணை பிறப்பிக்கும். இவ்வாறு, கோப்புகளை அரசுக்கு அனுப்பி அரசாணை பெறுவதில், அதிக தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், 2021ல் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, சி.எம்.டி.ஏ., குழும நிர்வாகமே ஒப்புதல் அளிக்கலாம் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை செயல்படுத்துவதில், சி.எம்.டி.ஏ., - வீட்டுவசதி துறை உயர் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், கடந்த ஆட்சிக்காலத்தில், இந்த அரசாணை திரும்ப பெறப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், கட்டட அனுமதியை விரைந்து மேற்கொள்ள, சி.எம்.டி.ஏ., நேரடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் கிர்லோஷ் குமார் பிறப்பித்த அரசாணை: அடுக்குமாடி கட்டடங்களுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் தர வேண்டும் என்ற பரிந்துரை கவனமாக பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், அடுக்குமாடி திட்டங்களை பரிசீலிப்பதற்கான குழு மாற்றி அமைக்கப்படுகிறது. சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தலைமையிலான இந்த குழுவில், தீயணைப்பு துறை இயக்குநர், சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர், சி.எம்.டி.ஏ., சீப் பிளானர், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர், மின் வாரியம், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள் என, 12 பேர் உறுப்பினர்களாக இருப்பர். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், ஒரு பொறியாளர் சிறப்பு அழைப்பாளராக இருப்பார். சி.எம்.டி.ஏ., சீனியர் பிளானர் இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். இந்த குழு பரிந்துரை அடிப்படையில், அடுக்குமாடி திட்டங்களுக்கான ஒப்புதலை, சி.எம்.டி.ஏ., வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதன் வாயிலாக லஞ்ச வேட்டைக்கு அடுத்த வேட்டு வைக்கப்பட்டு உள்ளதாக கட்டுமானத் துறையினர் கூறுகின்றனர்.
When will they increase the FSI?