கடலுக்குள் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் பெசன்ட் நகர் கடற்கரையில் உற்சாகம்
சென்னை, நாட்டில் தமிழகம், புதுச்சேரி, ஒடிசா உள்ளிட்ட கடற்கரைகளில் வந்து ஆலிவ் ரிட்லி ஆமைக்குஞ்சுகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஒரு ஆமை 100ல் இருந்து 150 முட்டைகள் வரை இடும்.ஆமை குஞ்சுகள் 40 முதல் 45 நாட்களில் முட்டையில் இருந்து வெளிவரும். இப்படி வெளிவரும்போது, பறவைகள், நாய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, அழிந்து வந்த சூழ்நிலையில், அரசும் தொண்டு நிறுவனமும் இணைந்து, கூண்டுகள் அமைத்து முட்டைகளை பாதுகாத்து வருகின்றன. அதில் இருந்து குஞ்சுகள் வெளிவரும்போது, பத்திரமாக கொண்டு போய் கடலில் விடும் பணியை செய்கின்றனர்.அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன.கடலுக்குள் இருந்தபடி தொண்டு நிறுவனத்தினர் அடித்த 'டார்ச் லைட்' வெளிச்சத்தை குறிவைத்து, ஆமைக்குஞ்சுகள் தங்களது துடுப்பு போன்ற பகுதிகளை வேகமாக அசைத்து, அசைத்து கடலை நோக்கி சென்றன.அவைகள் ஆர்வத்துடன் கடலுக்குள் செல்வதைப் பார்த்த குழந்தைகள் முதல் பெரியோர் வரை கைதட்டி மகிழ்நதனர்.இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த நிகழ்வு, ஆமைக்குஞ்சு பொரிப்பதன் அடிப்படையில் தொடர்ச்சியாக நடைபெறும்.18 ஆண்டுகளுக்கு பின்...ஆலிவ் ரிட்லி தாய் ஆமை கடற்கரையில் வந்து முட்டையிட்டு செல்வதுடன், அதன் கடமை முடிந்து விடுகிறது. அதன் பின், இந்த குஞ்சுகள் பூமியின் வெப்பத்தால் அடைகாக்கப்பட்டு, குஞ்சாக வெளிவரும். வெளிவந்த முதல் நாளே கடலுக்குள் சென்று நீந்தி, தன் வாழ்க்கையை துவங்கிவிடும்.சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த ஆமைக்குஞ்சுகள் கடலில் எந்த பகுதியில் பிறந்தனவோ, அதே கடற்கரை பகுதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின், தாய் ஆமையாக வந்து முட்டையிடுவது குறிப்பிடத்தக்கது.