உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்

கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே... புதிய 2 ரயில் பாதை ரூ.365 கோடியில் அமைக்க வாரியம் ஒப்புதல்

சென்னை :சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், கும்மிடிப்பூண்டி - அத்திப்பட்டு இடையே, 365.42 கோடி ரூபாயில், மூன்று, நான்காவது ரயில் பாதைகள் அமைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மின்சார ரயில்கள் தாமதம் குறையும்; இரட்டிப்பு சேவை வழங்க முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரயில்களை இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் உள்ளன.செங்கல்பட்டு வரை மூன்று ரயில் பாதைகளும், அரக்கோணம் வரை நான்கு ரயில் பாதைகளும் இருப்பதால், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் பெரிதாக தாமதமின்றி இயக்கப்படுகின்றன.ஆனால், சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும்போதெல்லாம், மின்சார ரயில்கள் ஓரங்கட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால், இந்த தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், தினமும் 45 நிமிடங்கள் வரை காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே, இந்த தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க வேண்டுமென, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து பயணியர் நெரிசல், சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு உள்ளிட்ட விபரங்களை கணக்கெடுத்து, மூன்றாவது, நான்காவது கூடுதல் ரயில் பாதை அமைக்க, ரயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை புறநகரில் உள்ள மற்ற வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் உள்ளது போல், கும்மிடிப்பூண்டி தடத்தில் கூடுதல் பாதை இல்லை. இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன.கும்மிடிப்பூண்டி தடத்தை பொறுத்தவரை, சென்ட்ரல் முதல் அத்திப்பட்டு வரையில் நான்கு பாதைகள் உள்ளன. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் சில வேளைகளில் தாமதமாக வருகின்றன.பயணியர் நெரிசல், சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மூன்று, நான்காவது புதிய ரயில் பாதைகளை, 365.42 கோடி ரூபாயில் அமைக்க, ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டது.தற்போது, இந்த புதிய பாதைக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அடுத்தகட்டமாக, இந்த புதிய பாதைகள் அமைப்பதற்கான பணியை, தெற்கு ரயில்வே விரைவில் மேற்கொள்ளும்.இந்த பாதைகள் பயன்பாட்டிற்கு வரும்போது, இந்த தடத்தில் விரைவு மற்றும் மின்சார ரயில்களின் தாமதம் குறைந்து விடும். மேலும், தற்போதுள்ள ரயில்களின் சேவையை இரட்டிப்பாக அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஜூலை 05, 2025 17:47

மிகவும் காலம் கடந்த முடிவு. நல்ல முடிவு. இதேபோல் ஜோலார்பேட்டை வரை 4வழி ஏற்படுத்த வேண்டும்


panneer selvam
ஜூலை 05, 2025 11:59

it is the shame on Tamilnadu MPs for neglecting this important project for the last 30 years . Dravidian MPs are so busy in parliament canteen than doing lobbying of welfare of their constituency . It is the curse of Tamils .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை