பகிங்ஹாம் கால்வாய் வண்டல் மண் ஏற்றி சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
எண்ணுார்:எண்ணுார், காட்டுக்குப்பம் அருகே பகிங்ஹாம் கால்வாயை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்து துார் வாரப்படும் வண்டல் மணல், கரை பகுதியில் மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை, இரு தினங்களாக இரவு வேளைகளில் லாரிகளில் அங்கிருந்து எடுத்து செல்லும் பணி நடக்கிறது.நேற்று முன்தினம் நள்ளிரவும், 20க்கும் மேற்பட்ட லாரிகள், மண் எடுப்பதற்காக வந்த நிலையில், 2வது வார்டு கவுன்சிலர் கோமதி சந்தோஷ்குமார் தலைமையில், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், லாரிகளை சிறைபிடித்தனர்.இது குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மண் எடுக்க வந்த லாரி ஓட்டுனர்களிடம், 'எங்கு கொண்டு செல்லப்படுகிறது?' என கேட்டதற்கு பதிலளிக்காமல் திணறினர்.'உரிய ஆவணங்களை காண்பித்த பின் பணிகளை தொடர வேண்டும்' என தாசில்தார் உத்தரவிட்டார். இதையடுத்து, மண் அள்ளும் பணியை நிறுத்தி சென்றனர்.முதற்கட்ட விசாரணையில், மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்வதாகவும், எடுக்கப்படும் மண் இடையஞ்சாவடியில் கொண்டு சென்று கொட்டப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.