உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையை கடந்தவர்கள் மீது மோதிய கார் பறிமுதல்; ஐ.டி., ஊழியர் கைது

சாலையை கடந்தவர்கள் மீது மோதிய கார் பறிமுதல்; ஐ.டி., ஊழியர் கைது

தாம்பரம், தாம்பரம் அருகே, சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிய ஐ.டி., நிறுவன ஊழியரும் கைது செய்யப்பட்டார்.தாம்பரம் சானடோரியம், அப்பாராவ் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ். ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி அமலா ஹாசல், 48. சித்தா மருத்துவர். அவர்களது மகன் அமரஷே், 12. மகள் ஹார்லின், 12. இரட்டையர்கள்.நேற்று முன்தினம் மாலை, சானடோரியம் ஆஞ்சநேயர் கோவில் அருகே, பள்ளி முடிந்து பேருந்தில் வந்த மகன், மகளை அழைத்துகொண்டு, வீட்டிற்கு செல்ல ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத கார், அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.இதில், நான்கு பேரும் காயமடைந்தனர். சிறுவன் அமரேஷுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரித்தனர்.சம்பவம் நடந்த இடம், குரோம்பேட்டை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், விபத்தை ஏற்படுத்தியது, சிவப்பு நிற 'மாருதி கிரெட்டா' கார் என்பது தெரியவந்தது.பின், அந்த காரின் எண்ணை வைத்து, அயப்பாக்கத்தில் காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிய வினோத், 32, என்பவரும் கைது செய்யப்பட்டார். மெப்ஸ் வளாகத்தில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், வினோத் பணிபுரிவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை