பண ஆசைகாட்டி ரூ.40 லட்சம் மோசடி பெண் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு
கொடுங்கையூர்: பண ஆசைகாட்டி 40 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொண்டித்தோப்பு, கண்ணையா தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன், 66. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த இவர், நஷ்டம் ஏற்பட்டதால் நிறுவனத்தை மூடியுள்ளார். அதேநேரம், கொண்டிதோப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை நிர்வகித்து வந்தார். கோவிலுக்கு அடிக்கடி வரும் கீதா என்பவர், கடந்த 2019ல் பத்மநாபனிடம் பிளாஸ்டிக் நிறுவனத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி பத்மநாபன் தன் சொத்துகளை விற்றும், அடமானம் வைத்தும், 40 லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அசல் மற்றும் லாபத்திற்கான பணம் ஏதும் கொடுக்காமல், கீதா ஏமாற்றியும் மிரட்டியும் வந்தார். இது குறித்து பத்மநாபன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிபதி வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கொடுங்கையூர் போலீசார் நேற்று, சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்கையூர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த கீதா மற்றும் ரமேஷ், சீனிவாசலு ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.