வங்கி கடன் மோசடி 5 நிறுவனங்களில் சி.பி.ஐ., ரெய்டு
சென்னை, சென்னையை சேர்ந்தவர் அறிவழகன்; வெளிநாடு வாழ் இந்தியர். இவர், மேற்கு தாம்பரம் முல்லை நகரில், 'அட்சயா ராயல் இன்ப்ராஸ்ட்ரக்சர் இந்தியா' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரும், அசோக் நகரைச் சேர்ந்த சூர்யநாராயணன், அண்ணா நகரைச் சேர்ந்த வேதமூர்த்தி உள்ளிட்டோர், எம்.ஆர்.சி., நகரில் உள்ள வங்கி ஒன்றில், சொத்து மதிப்பை அதிகமாக காண்பித்தும், போலி ஆவணம் தயாரித்தும், 3.68 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.இதற்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரி கார்த்திகேய வெங்கடேஸ்வரன், சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்தார். சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், நேற்று மேற்கு தாம்பரம், முல்லை நகரில் உள்ள, அறிவழகனுக்கு சொந்தமான நிறுவனம், வங்கி அதிகாரிகள் வீடு என, ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.