உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  புறநகர் பகுதியை மிஞ்சும் மத்திய சென்னை: வடிகால்வாயில் கழிவுநீரை விடும் அவலம்

 புறநகர் பகுதியை மிஞ்சும் மத்திய சென்னை: வடிகால்வாயில் கழிவுநீரை விடும் அவலம்

அண்ணா நகர்: புறநகர் பகுதியை மிஞ்சும் வகையில், மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகிலேயே, லாரியில் இருந்து கழிவுநீரை, மழைநீர் வடிகாலில் திறந்து விடும் அவலம், அமைந்தகரையில் அரங்கேறி வருகிறது. புறநகர் பகுதியில், குடியிருப்பு மற்றும் சாக்கடையில் தேங்கும் கழிவுநீரை, லாரி வாயிலாக உறிஞ்சி, திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் சட்டவிரோதமாக திறந்து விடப்படுகிறது. புறநகரையே மிஞ்சும் வகையில், மத்திய சென்னைக்கு உட்பட அண்ணா நகர் மண்டலம் அருகில், இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அமைந்தகரை, புல்லா அவென்யூவில், மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 1வது குறுக்கு தெருவில் இயங்கும் பெண்கள் அரசு பள்ளியின் வெளிப்புறத்தில், மழைநீர் வடிகால்வாய் செல்கிறது. இதில், தனியார் கழிவுநீர் லாரி ஊழியர்கள், பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை எடுத்து வந்து, பட்டப்பகலில் இந்த மழைநீர் வடிகால்வாயில் திறந்துவிட்டு அட்டூழியம் செய்கின்றனர். இதனால், சுற்றுவட்டார பகுதியே சுகாதார சீர்கேடில் சிக்கி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறுகையில், 'பட்டப்பகலில், மாநகராட்சி அலுவலகம் அருகிலேயே மழைநீர் வடிகால்வாயில், லாரி வாயிலாக கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. 'மாநகராட்சியின் கண்காணிப்பு இல்லாததால் கழிவுநீர் லாரிகள் அட்டகாசம் செய்கின்றன. எனவே, தனியார் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை