டி.என்.சி.ஏ., லீக் கிரிக்கெட் போட்டி சென்னை மாநகராட்சி அணி வெற்றி
சென்னை:டி.என்.சி.ஏ., கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் 'லீக்' ஆட்டத்தில், 'பேங்க் ஆப் இந்தியா' அணிக்கு எதிரான போட்டியில், சென்னை மாநகராட்சி அணி வெற்றி பெற்றது.டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் 50 ஓவர்கள் அடிப்படையில், 'லீக்' கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இப்போட்டியில், தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள், நிறுவனங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று முன்தினம் நடந்த 'லீக்' போட்டியில், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அணியும், பேங்க் ஆப் இந்தியா மனமகிழ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.இதில், முதலில் களமிறங்கிய சென்னை மாநகராட்சி அணி, 28.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக கார்த்திக் 57 ரன்கள் எடுத்தார்.எளிய இலக்குடன் அடுத்து களமிறங்கிய பேங்க் ஆப் இந்தியா அணிக்கு, மாநகராட்சி அணி பந்துவீச்சாளர்கள் நாவலடி முத்துக்குமார், சுஜித் குமார் ஆகியோர் நெருக்கடி தந்தனர்.இதனால், ரன் குவிக்க சிரமப்பட்ட பேங்க் ஆப் இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 26 ஓவர்களில் 119 ரன்களில் 'ஆல் அவுட்' ஆகினர். இதனால், மாநகராட்சி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நாவலடி முத்துக்குமார் 5 விக்கெட்டுகளையும், சுஜித் குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.