உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூடப்பட்ட தனியார் பள்ளி 18 நாட்களுக்கு பின் திறப்பு

மூடப்பட்ட தனியார் பள்ளி 18 நாட்களுக்கு பின் திறப்பு

திருவொற்றியூர்:வாயு கசிவு விவகாரத்தில் மூடப்பட்ட தனியார் பள்ளி, 18 நாட்களுக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, 10ம் வகுப்பு, - பிளஸ் 2 வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.திருவொற்றியூர், கிராமத்தெருவில் உள்ள விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 1,970 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். அக்., 25ல் பள்ளி வளாகத்தில் வாயு கசிவு ஏற்பட்டதாக, 45 பேர் மயங்கி விழுந்தனர். மீண்டும் நவ., 4ல் பள்ளி திறக்கப்பட்டபோதும், வாயு கசிவு ஏற்பட்டதாக, 10 மயக்கம் அடைந்தனர். இதனால், பள்ளி மூடப்பட்டது.மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஐந்து நாட்களாக முகாமிட்டு, வாயு கசிவு உள்ளதா என்று ஆய்வு நடத்தினர். முதற்கட்ட அறிக்கையில், வாயு கசிவு ஏதும் இல்லை என, அறிக்கை அளித்துள்ளனர்.பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 495 பேரின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து, வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பள்ளியில் காற்றோட்ட வசதியை அதிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; பாதுகாப்புடன் பள்ளியை திறந்து, வகுப்பு நடத்தலாம் என, பெற்றோர் ஆலோசனை தெரிவித்தனர். பாதிப்பிற்கு காரணமாக சந்தேகிக்கப்பட்ட, 35 முயல்களும் பள்ளி வளாகத்தில் இருந்து அகற்றப்பட்டன. அதன்படி, நேற்று காலை, பள்ளி தாளாளர் லாரன்ஸ், முதல்வர் ரூத் வனிதா தலைமையில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ - மாணவியரின் பெற்றோருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, பின் வகுப்புகள் துவங்கப்பட்டன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி வளாகத்தில், மருத்துவ குழுவினரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர். தவிர, 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை பிரித்து, கூடுதல் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.பள்ளி முதல்வர் ரூத் வனிதா கூறியதாவது:மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழல் பள்ளியில் உள்ளது. காற்று வசதிக்காக கூடுதல் மின்விசிறிகள் போடப்பட்டுள்ளன. பாதுகாப்பு வசதிக்காக அதிநவீன, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.முதற்கட்டமாக, 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன. அதன்படி, 90 சதவீதம் மாணவர்கள் வந்துள்ளனர். ஏற்கனவே, பெரும்பாலான பாடங்கள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள பாடங்கள் முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் நிலையில், திருப்புதல் நடைபெறும்.பெற்றோருடன் ஆலோசித்து, படிப்படியாக மற்ற வகுப்புகளும் துவங்கப்படும். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அறிவுறுத்தல்களும் பின்பற்றப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை