பேலன்ஸ் இருக்கும் வரை மெட்ரோ அட்டை செல்லும் சி.எம்.ஆர்.எல்., அறிவிப்பு
சென்னை,'மெட்ரோ பயண அட்டையில் இருப்பு தொகை இருக்கும் வரையில், மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தி கொள்ளலாம்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக, 'சிங்கார சென்னை அட்டை'யை கடந்த 2023ம் ஆண்டு ஏப்., 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையை மாநகர பஸ்களிலும் பயன்படுத்தும் திட்டம், கடந்த ஜன., 6ம் தேதி துவக்கப்பட்டது. சிங்கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சி.எம்.ஆர்.எல்., பயண அட்டையில் இருந்து சிங்கார சென்னை அட்டைக்கு, கடந்த 1ம் தேதி முதல் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், பயண அட்டை ரீசார்ஜ் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயணியர் அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. பயண அட்டையில் இருப்பு தொகை இருக்கும் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், ரீசார்ஜ் செய்ய முடியாது. சிங்கார சென்னை அட்டை வாங்க மெட்ரோ ரயில் நிலையங்களில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பயணியர் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.