ரயிலில் கல் வீசி தாக்குதல் கல்லுாரி மாணவர் கைது
பெரம்பூர் கல்லுாரி மாணவர்கள் மீது கற்கள் வீசிய மற்றொரு கல்லுாரி மாணவனை, ரயில்வே போலீசார் நேற்று கைது செய்தனர். அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து, சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில், நேற்று முன்தினம் காலை வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ரயிலில் தியாகராயா கல்லுாரி மாணவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களின் கல்லுாரி அடையாள அட்டையை கழற்றும்படி, வியாசர்பாடி அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் தகராறு செய்து, அவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில், இரண்டு மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல் துறை உயரதிகாரிகள், சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட அம்பேத்கர் அரசு கலைக்கல்லுாரி மாணவரான, திருவள்ளூர், எல்லப்ப நாயக்கர்பேட்டையை சேர்ந்த நந்தகுமார், 18, என்பவரை, நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.