வீட்டுக்கான முன்தொகை ரூ.5 லட்சம் நிறுவனம் திருப்பி வழங்க உத்தரவு
சென்னை வீட்டை ஒப்படைக்க தாமதித்த கட்டுமான நிறுவனம், முன்தொகையாக வசூலித்த, ஐந்து லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா நகரில், 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில், 'மெட்ரோ சோன்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. அதில் வீடு வாங்க, ஏ.என்.ஸ்ரீதரன், சித்ரா ஸ்ரீதரன் ஆகியோர் சேர்ந்து, 2018, டிசம்பரில் முன்பதிவு செய்தனர். இதற்காக இவர்கள், முன்தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் செலுத்தினர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், 2019 ஜூனில் வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, வீடு வாங்குவதற்காக செலுத்திய, ஐந்து லட்சம் ரூயை திருப்பித்தர வேண்டும் என கேட்டு, ஸ்ரீதரன் மற்றும் சித்ரா ஸ்ரீதரன் ஆகியோர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மனு செய்தனர். இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா, உறுப்பினர்கள் எல்.சுப்ரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நாளில், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, வீடு வாங்குவதற்காக செலுத்திய தொகையை திரும்ப பெற மனுதாரர் தகுதி பெறுகிறார். இதையடுத்து, மனுதாரர் செலுத்திய, ஐந்து லட்சம் ரூபாயை, வட்டியுடன் சேர்த்து கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். மேலும் வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.