மூடு கால்வாயில் மழைநீர் தேக்கம் வடிகால் கட்டி, சாலை அமைக்க உத்தரவு
சென்னை, தென் சென்னையில், ஒட்டியம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்ல, 1 கி.மீ., நீளம், 30 அடி அகலத்தில், அரசன்கழனி ஏரி வரையும், அரசன்கழனி ஏரியில் இருந்து, செம்மஞ்சேரி கால்வாய் வரை, 975 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில், நுாக்கம்பாளையம் சாலையிலும் மூடு கால்வாய் கட்டப்பட்டது.மேலும், ஜெவகர் நகர், எழில் நகரில் இருந்து, செம்மஞ்சேரி கால்வாய் வரை, 140 மீட்டர் நீளத்தில், மூடு கால்வாய் கட்டப்பட்டது. இந்த பணிகள், கடந்த ஆண்டு முடிந்தன.இதில், நுாக்கம்பாளையம் சாலையின் கீழே 30 அடி அகல கால்வாய், மேலே 50 மற்றும் 80 அடி அகல சிமென்ட் சாலையாக உள்ளது. ஆனால், மூடு கால்வாய் மேல் பகுதியை நீரோட்டம் பார்க்காமல் அமைத்துள்ளனர்.மூடு கால்வாய் கான்கிரீட் கலவை என்பதால், மழைநீர் நிலத்திற்குள் செல்லாமல் நாள் கணக்கில் தேங்குகிறது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழைநீரும், தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.இதனால், மூடு கால்வாயின் தரம் குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து, நம் நாளிதழில் நேற்று, விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, மூடுகால்வாய் தரம் குறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.மேலும், மூடு கால்வாய் அமைத்த பின், பக்கவாட்டில் ஊராட்சி சார்பில் வடிகால் கட்ட வேண்டும். அதோடு, மூடு கால்வாய் மீது நெடுஞ்சாலைத் துறை, சாலை அமைத்திருக்க வேண்டும்.வடிகால் மற்றும் சாலை அமைக்காததால், மூடு கால்வாய் மீது தேங்கிய மழைநீர் வடிய வழி இல்லாமல் தேங்கியது தெரிந்தது.இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில், வடிகால் கட்டி, சாலை அமைக்க வேண்டும் என, அந்தந்த துறைகளுக்கு வலியுறுத்தி உள்ளது.